சபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்! தூண்டும் சங்க பரிவாரம்??!!

 

வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கி  10 முதல்  50  வயதுக்கு உட்பட்ட பெண்களும் அய்யப்ப தரிசனம் செய்யலாம் என அனுமதி அளித்தது.

ஆரம்பத்தில் இதை எதிர்க்காத பந்தள அரச குடும்பமும் சங்க பரிவாரங்களின் அரசியல் நோக்கத்திற்கு பலியாகி எதிர்க்கத் தொடங்கினார்கள்.

உச்சநீதி மன்றத்தில் மனு போட்டிருக்கிறார்கள்.

அதுவரை பொறுத்து இருக்க மனமில்லாமல் நேற்று கோவில் நடை திறந்ததும் பெண் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த சங்க பரிவாரங்கள் வன்முறையை வெட்கமின்றி அரங்கேற்றி இருக்கிறார்கள்.

காரில் இருந்தவர்களை பெண்கள் என்றும் பாராமல் அடித்து விரட்டியிருக்கிறார்கள் .  பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை.

முற்போக்கு எண்ணம் கொண்ட பெண்கள் போராட முடிவெடுத்து இருக்கிறார்கள்.    இடது சாரி அரசு அடக்கு முறையை  கையில் எடுக்காமல் பொறுமை காத்திருக்கிறது.

தொடக்கத்தில் இது சரியே. ஆனால் இந்த மென்மையான அணுகுமுறை எப்படியாவது கலவரத்தை உருவாக்க காத்திருக்கும் பரிவாரங்களை அடக்க பயன் படுமா என்பது தெரியவில்லை.

சிலர் இதை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒப்பிடுகிறார்கள்.

ஒப்பீடு சரியில்லை.   ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராட்டக்காரர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. உலகம் வியந்ததே இத்தனை லட்சம் மக்கள் தானாகவே கூடியும் ஏன் எந்த வன்முறையும் ஏற்படவில்லை என்பதால் தான்.

கடைசியில் மக்கள் சக்தியின் முன் மண்டியிட்ட அரசு வன்முறையை  கையில் எடுத்து கூட்டத்தை கலைத்தது.

உண்மையில் இவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் உண்ணாவிரதம் இருக்கட்டும். பிரச்சாரம் செய்யட்டும். வன்முறையால் தடுக்க முனைவது எதனால்?    மக்கள் ஆதரவு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக திரளும் என்பதால் தானே.

பாஜக வை தோலுரித்து மக்கள் மத்தியில் காட்ட வேண்டும்.

2006 ல் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி உச்ச நீதி மன்றத்தில் ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று  கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனால் இதே ஆர் எஸ் எஸ் காரர் கள்தான் இப்போது கலவரத்தை தூண்டுகிறார்கள் .  இந்த இரட்டை வேடத்தை தான் மக்கள் மத்தியில் விளக்க  வேண்டும்.

மாநில அரசு இரும்புக் கரம்  கொண்டு இந்த கலவரக்காரர்களை அடக்கினால்தான் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு மரியாதை.

LEAVE A REPLY