மத சடங்குகளில் நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டுமாம்; உ நீ சர்ச்சை கருத்து??!

 

உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்த நிலையில் இன்று சென்னை உயர் நீதி மன்றம் அதற்கு மாறான சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதி ரங்க ராமானுஜ தேசிகர் ஒரு உயில் எழுதி வைத்து இறந்த நிலையில் அவர் பரிந்துரைத்த மூன்று பேரில் ஒருவர் இறந்து விட்டதால் மற்ற இருவரில் ஒருவரை நியமிக்காமல் வேறு மூன்றாவது நபராக யமுனாசாரியார் என்பவர் பீடாதிபதியாக பொறுப்பேற்க தடை கேட்டு வழக்கு.

விசாரித்த நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் தடை விதிக்க மறுத்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்த மடம் பார்ப்பனர்கள் சமுதாயம் சம்பத்தப் பட்டது.   அவர்களே மடத்தலைவராக  ஆக முடியும்.

இந்த மடத்திற்கு நன்கொடைகள் மூலமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன.   அவற்றை நிர்வகிப்பதில் போட்டி வருவது இயல்பு.  அதில் யாரை நியமித்தாலும் மற்றவர்களுக்கு எந்த  பிரச்னையும் இல்லை.

நீதிபதிகள் இந்த வழக்கோடு நின்று விடாமல் தெரிவித்த கருத்துதான் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத சார்பற்ற வகையில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் மத சடங்குகளில் தலையிடும்போது சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தது தேவையில்லாதது மட்டுமல்ல சரியானதும் அல்ல.

அப்படியானால் உச்ச நீதி மன்றம் தவறு செய்து விட்டதா?

அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் சம நீதி என்ற அடிப்படை உரிமையை எல்லாக் குடிமக்களுக்கும் வழங்கி பாதுகாக்க வேண்டும்  என்ற கடமை உணர்வு நீதிபதிகளுக்கு இல்லாமல் போனது ஏன்?

உச்சநீதி மன்றம் சபரிமலை பிரச்னையில் வழங்கிய தீர்ப்பு பற்றி நீதிபதிகளுக்கு தெரியாதா?

தெரிந்தே இந்த கருத்தை பதிவு செய்தார்களா?   அது குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதா?   உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்த மாநில அரசு போராடிக் கொண்டிருக்கையில் இப்படியான கருத்தை நீதிபதிகள் வெளியிட்டது சரியானதுதானா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நீதிபதிகள் மூல வழக்கில் கண்ட பிரச்னைகளை மட்டும் அணுக வேண்டுமே தவிர தீர்வு சொல்ல வேண்டுமே தவிர தவறாக புரிந்து கொள்ளப் படும் வகையில் அதிலும் குறிப்பாக உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மாறாக பொதுவான  கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே நமது  கருத்து.

LEAVE A REPLY