பெரிய கோவில் வளாகத்தை வணிக மையமாக்க முயன்ற ரவிசங்கர் கும்பல்?!

தஞ்சை பெரிய கோவில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படும் கோவில்.

யுனெஸ்கோ அமைப்பால் உலகப்  பாரம்பரிய மையமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அங்கே வாழும் கலை   அமைப்பை நடத்தி  வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெரியகோவில் வளாகத்தில்  ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்தப் போவதாகவும் அதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 3000  கட்டணம் என்றும் நிர்ணயித்து  சுமார்  300  பேர் பயன்படுத்துகிற வகையில் ஒரு பெரிய தடுப்பு பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.

பணக்கார்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் மட்டுமே ஆன்மிக தொண்டு செய்து வருபவர் ரவிசங்கர்.     சாமானியர் பக்கமே இவர் செல்ல மாட்டார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இதற்கு முன் பல இடங்களில்  இது போன்று  வகுப்புகள் நடத்தி சுற்றுச்சூழல் பாதிக்கக் கூடிய சம்பவங்களை  நடத்தியவர் என்று  பெயர் பெற்றவர்.  உச்ச நீதி மன்றம் இவருக்கு  சுற்று சூழலை கெடுத்ததற்காக ஆறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத் தக்கது.

இதற்கு மத்திய அரசின் தொல்லியல் துறை எப்படி அனுமதி  அளித்தது?

ரவிசங்கருக்கு தஞ்சாவூர் சொந்த ஊர் என்பதால் இங்கு நடத்த முடிவெடுத்ததாக மாவட்ட வளர்ச்சி குழு உறுப்பினர் கஸ்துரிரங்கன் கூறுகிறார்.   ஏன் அதை வேறு எங்கும் நடத்தக் கூடாதா?   கோவிலுக்குள் தான் நடத்த வேண்டுமா?

இதற்கு ஆட்சேபணை தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் கோவில்களை தங்கள் விரும்பியவாறு பயன் படுத்துவார்கள். ஆனால் அதே உரிமையை மற்றவர்கள் பயன் படுத்த விட மாட்டார்கள்.

தனி நபர் ஒருவர் நடத்தும் நிகழ்ச்சி ஆன்மிகம் சம்பத்தப் பட்ட  ஒன்றாகவே இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத ஒருவர் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி விட அனுமதிப்பார்களா?

பெரிய கோவிலில் இன்னும் முழுவதுமாக எல்லா சிற்பங்களும் கண்டறியப் படவில்லை.    எல்லா எழுத்துக்களும் முற்றாக எடுத்து எழுதப் படவில்லை.

தனியாரை உள்ளே அனுமதித்தால் அவர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை கண்காணிக்க கூட போதுமான அலுவலர்கள் இல்லை.  ஏன் போதுமான பாதுகாப்பில்லாமல் தனியாரை உள்ளே அனுமதிக்க வேண்டும்?

இது தொடர்பான வழக்கு  பதியப் பட்டு மதுரைகிளை உயர்நீதிமன்றம் இன்று நிகழ்ச்சிக்கு  இடைக்கால தடை விதித்து அங்கே அமைக்கப் பட்ட பந்தல்களை பிரிக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்து அறநிலையத் துறையும் சேர்ந்து கொண்டு இந்த அத்துமீறிய அனுமதியை வழங்கி  இருப்பது  மிகவும் கண்டிக்கத் தக்கது.

LEAVE A REPLY